Saturday, 1 September 2012

அரசியல்வாதி Vs அரசியல்மேதை



“டேய்,அவன் கொஞ்சநாளா அலுவலகத்திலே பாலிடிக்ஸ் பன்றாண்டா”
என்று ஒரு சஹ ஊழியர் கிண்டலடித்தார்.(commented)
பாலிடிக்ஸ் செய்தல் என்றால் என்ன? ஏமாற்றுதல், வஞ்சித்தல், தந்திரமாக சாதித்தல், தில்லுமுல்லு செய்தல்,  குட்டையைக்குழப்பி மீன்பிடித்தல் என்றெல்லாம் பொருள்படுகிறது.
அரசியல்வாதிகள் அரசியலை சமுதாய சேவைக்கான ஒரு கருவி என்று எண்ணாமல்  அரசியலை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
     ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர்  ஸ்ரீ பாலா சாஹேப் தேவரஸ் அவர்கள்   அரசியல்வாதி  -அரசியல்மேதை  (Politician & Statesman) ஆகியோரிடையே உள்ள வேறுபாடுகளை அழகாக விளக்கியுள்ளார் :
அரசியல்வாதி அடுத்த தேர்தலைப்பற்றி கவலைபடுகிறான். ஆனால்
 அரசியல்மேதை அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறான்
தொலைக்காட்சிப்பெட்டி, அரிசி, பருப்பு ,செருப்பு, வேஷ்டி ,மிக்சி என்றெல்லாம் இலவசங்களை கொடுப்பவர்கள் அரசியல்வாதிகள்.
கங்கை-காவிரி இணைப்பு, பெரும்தொழிற்சாலைகள்நிறுவுதல்,அனைவருக்கும்
கல்வி, நாற்கர சாலை, இயற்கை உரம் மூலம் விவசாய மேம்பாட்டுதிட்டம் ,நீர்பாசனதிற்க்காக அணைகள்   கட்டுதல் போன்ற திட்டங்களை தீட்டியவர்கள் அரசியல்மேதைகள்.
     மேற்குவங்க  முதல்வர் மமதா பேனர்ஜி அவர்கள் அண்மையில் அரசியல்வாதிகளின் அவலத்தை குறிப்பிடுகையில் ‘இன்றைய அரசியல் தலைவர்கள் முதுகு எலும்பில்லாதவர்கள், சுயமாக முடிவெடுக்கக் திராணியற்றவர்கள் ,சுயநலவாதிகள், களஊழியர்களின் நாடித்துடிப்பை அறியாதவர்கள்  என்றெல்லாம் கூறியுள்ளார்.  
                தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஐந்தாண்டும் தொகுதி பக்கம் தலை வைத்துப்படுக்காத அரசியல்வாதிகள் ஏராளம் .
     ஒரு முறை “எங்கள் தொகுதி எம் பி காணவில்லை.கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் “என்று கிண்டலாக ஒரு விளம்பரம் வந்தது.   எப்படி இருக்கு?
     ஒரு நிகழ்ச்சிக்கு ஐந்தாறு மணி நேரம் தாமதமாக செல்வதை வழக்கபடுத்திகொண்ட அரசியல்வாதிகளினால் “இந்தியன் பஞ்சுவாளிடி”
(Indian Punctuality)என்ற சொற்றொடர் உருவாகிவிட்டது!
     சிக்கன நடவடிக்கை பற்றி பேசப்போகும் அமைச்சரோடு நூறு கார்கள் ஊர்வலம் சென்றதாம்!
     ஒரு மேடையில் பழுத்த அரசியல்வாதி முழங்குகிறார்: ௦”மக்களே,உயிரினும் மேலான வாக்காளர்களே ,சாதி சமயமற்ற ஆட்சி அமைக்க என்னையே தேர்ந்தெடுங்கள். ஏனென்றால்,நான் உங்கள் ஜாதிக்காரன்” தில்லுமுல்லை கவனித்தீர்களா?
     தேர்தல் நிதிக்காக கடைக்குவந்த அரசியல்வாதிகளை பார்த்து ஒரு நகை தொழிலதிபர் வயிற்றெரிச்சலுடன் சொன்ன வார்த்தைகள்: “ நன்கொடை வேட்டைக்கு  வராண்டா,இந்த ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்து உடனே வெளியே அனுப்பிவிடு. இல்லேன்னா  கடை ஆம புகுந்தவீடு மாதிரி ஆகிவிடும்.”
ஏழை பட்டாளத்திடமிருந்து காப்பாற்றுகிறேன் நிதி கொடுங்கள் என்று பணக்காரர்களின் நிதியையும், பணக்கார முதலைகளிடமிருந்து காப்பாற்றுகிறேன் வாக்களியுங்கள் என்று ஏழை களின் வாக்குகளையும் தந்திரமாக பெறும் அரசியல்வாதிகளின் மூளையை எப்படி பாராட்டுவது?
     அரசியலில் இன்று கட் அவுட் கலாச்சாரம் வந்துவிட்டது.ஏனென்றால் தலைவருக்கு கட் அவுட் வைக்கவில்லை எனில் தொண்டர்களுக்கு கெட் அவுட் கட்டளைதான்!
பெண்களுக்கு 33%  இடஒதுக்கீடு இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஒரு வேளை நிறைவேறினாலும் 33%  இடங்களுக்கு நல்ல பெண் வேட்பாளர்கள்  கிடைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.  கந்திரி அரசியல்வாதிகளை நம்பி எத்தனை பெண்கள் அரசியல் பிரவேசம் செய்ய முன்வருவார்கள்?
அரசியலே வேண்டாம்,அதைவிட இந்தமாதிரி நாட்டிற்கு சிறந்த சேவை செய்ய முடியும்  என்கிறார் அப்துல் கலாம்ஜி.  எந்தமாதிரி?
திருப்புமுனை: சவால்களை கடந்த பயணம் என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:  1998 மார்ச் 15 நல்லிரவு பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது அமைச்சரவையில் அமைச்சராக  சேரும்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். யோசித்து காலையில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எனது நெருங்கிய நண்பர்களை அவசரமாக அழைத்து இதுபற்றி இரவு ஒரு மணி முதல் மூன்று மணி வரை கலந்தாலோசித்தேன்
அக்னி ஏவுகணை மற்றும் அணுசக்தி மேம்பாடு ஆகிய முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது   நாட்டின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும்  மிக அத்யாவசியமானது.அரசியலைவிட இதன் மூலமே  தேசத்திற்கு மேலான சேவை செய்ய முடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த காலை ஒன்பது மணிக்கு வாஜ்பாய்ஜி அவர்களை வீட்டில் சந்தித்து எனது முடிவை சொன்னேன்.  சரியான முடிவு, உங்கள் பணி வெற்றி அடையட்டும் என்று புன்முறுவலோடு என்னை வாழ்த்தி அனுப்பினர்.
நல்லவர்கள் அரசியலில் பிரவேசிக்க தயங்குவதேன்?
துர்நாற்றம் வீசும் சாக்கடையாக இருப்பதால்.
பாய்ந்தோடும் நீரோடையாக அரசியல் மாறட்டும்
அரசியல்வாதிகள் நல்ல அரசியல்மேதைகள் ஆகட்டும்!

1 comment:

  1. Nice blog... Keep writing...
    படித்தவர்கள், நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் நிறைய உள்ளனர்... ஆனால் இன்றைய அரசியல் சூழலும் அரசியல்வாதியும் நல்லவர்களை அரசியலுக்கு வர விடுவதில்லை... இலவசங்களால் நல்லவர்களையும் சோம்பேறி ஆக்குகின்றனர்...
    http://sbpaddy.blogspot.com/

    ReplyDelete